தேயிலைத் தோட்டங்களிலே பெண்களது பின்தங்கிய நிலை | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் எம். சின்னத்தம்பி
Description
பெண்களது கடந்தகால - நிகழ்கால சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர்தினம் (International Women’s Day) முதன்முதலாக 1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி கொண்டாடப்பட்டது. ஒரு நூற்றாண்டு காலமுடிவில் 2011ஆம் ஆண்டு அது நினைவுகூரப்பட்டதோடு, ஒவ்வொரு வருடமும் அதேதினத்தில் பூகோளரீதியாகத் தொடர்ந்து அது கொண்டாடப்பட்டும் வருகிறது. அவ்வாறு கொண்டாடப்படும்போது ஏதாவதொரு முக்கிய விடயத்தைக் கருப்பொருளாக வைத்தே அத்தினம் கொண்டாடப்படும்.
அண்மைக்காலங்களில் பெண்களது சமூக – பொருளாதார - அரசியல் அந்தஸ்தில் நேர்மறையான வளர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளபோதும், பெண்களைப் பொறுத்தவரை, உலகம் இன்றும் சமமற்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது. எனவே, பெண்களின் கடந்த கால - நிகழ்கால சாதனைகளைக் கொண்டாடும் அதேவேளையில், இந்த சமமற்ற நிலையினைப் போக்குவதற்கு எதிர்காலத்தில் என்ன முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகும். பூகோளமட்டத்தில் சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்படும் இச்சந்தர்ப்பத்தில் சில பொருளாதாரத்துறைகளில் பெருந்தொகையான பெண்கள் பணிபுரியும் எமது நாட்டினது பெருந்தோட்டத்துறையில் பெண்தொழிலாளரது நிலை எவ்வாறு உள்ளது என்பதை இச்சிறு கட்டுரை ஆராய்கின்றது.